×

குக்கர் கட்சியில இருந்து ஆண்டு இறுதிக்குள் ஒட்டுமொத்தமாக டிரான்ஸ்பராகும் தொண்டர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

 

 

‘‘இலை கட்சி எம்எல்ஏ மீது கடுப்பில் இருக்காங்களாமே மக்கள்…’’ என்று கேட்டார் விக்கியானந்தா. ‘‘வட மாநில நதி பெயர் கொண்ட சட்டமன்ற தொகுதியில் இலைக்கட்சி எம்எல்ஏவாக ‘முருகனின் மறு பெயர் கொண்டவர்’ இருக்கார். சேலத்துக்காரரின் தீவிர ஆதரவாளராக மட்டும் தன்னை காட்டி கொண்டு தொகுதியில் வலம் வருகிறார். தான் ஒரு மக்கள் பிரதிநிதி என்பதை மறந்து தன் அடிபொடிகளுடன் தொகுதியில் ரவுண்ட் அடிக்கிறாராம். ஆனால், தொகுதி வளர்ச்சிக்காக இதுவரை எதுவும் செய்ததில்லை என்று மக்கள் புலம்பறாங்க. அதையெல்லாம் காதில் போட்டு கொள்ளாமல் சேலம்காரர் உத்தரவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறாராம். கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் வளர்ச்சிப்பணிகள் தொடர்பான கூட்டங்கள், துறை உயர் அலுவலர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் மற்ற தொகுதி எம்எல்ஏக்கள் பங்கேற்றாலும், எதிர்க்கட்சி என்ற பெயரில் இவர் புறக்கணிக்கிறாராம். அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் வந்து சென்ற பிறகு, தனியாக தனது கட்சியினருடன் வந்து சில பயனாளிகளை மட்டும் அழைத்து நலத்திட்ட உதவிகள் கொடுப்பது போல் போஸ் கொடுத்து விட்டு சென்று நான் மக்கள் பிரதிநிதி என் பக்கம் பெரிய கூட்டமே இருக்கு என்பதை காட்டுவதற்காக இப்படி நடந்து கொள்வதாக அவரது கட்சியினரே பேசி கொள்கிறார்கள். இதனால் மக்கள், ‘இந்த தொகுதிக்கு இது தான் ராசி போல.. ஏற்கனவே இதே தொகுதியில் இலைக்கட்சிக்காரரான ஐந்தாண்டுகளுக்கு அமைச்சராயிருந்தவர் எதுவுமே செய்யல. அவருக்கு ெதாகுதி மீண்டும் கிடைக்காமலிருக்க உள்ளடி வேலை பார்த்து, இவரு எம்எல்ஏ ஆனாரு. இவரும் தொகுதியை கண்டுக்கல. நாடாளுமன்ற தேர்தலுக்கு வரும்போது இவங்களை ரவுண்ட் கட்டி அடிக்கிறோம் என்று பேசி கொள்கிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘குக்கர்ல இருந்து எஸ்கேப் ஆகி மாற்று கட்சிகளில் எதற்காக தொண்டர்கள் அடைக்கலம் தேடுறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘குக்கர் கட்சி தொடங்கிய காலத்தில் மன்னர் மாவட்டம் அரசியல் ரீதியாக மத்திய, வடக்கு, தெற்கு மாவட்டமாக பிரிக்கப்பட்டது. புதிதாக மாவட்ட செயலாளர்களும் நியமிக்கப்பட்டாங்க. இதில் நடிகர் பெயர் கொண்ட வடக்கு மாவட்ட செயலாளர், கட்சி பணிகளை கண்டுகொள்வதில்லையாம். தலைமை சொன்ன பணிகளை கூட இவர் சரிவர செய்வதில்லை. 2வது கட்ட நிர்வாகிகள், தொண்டர்களை கூட மதிப்பதில்லையாம். நேடியாக வீட்டிற்கு சென்று பேசினாலும் எதையும் காது கொடுத்து கேட்பதில்லை. மாவட்ட செயலாளர் பற்றி தலைமையிடத்துக்கு கொண்டு சென்றால் குக்கர் தலைமை கண்டு கொள்வதில்லையாம். இதனால், தலைமை மீதும் மாவட்ட செயலாளர் மீதும் தொண்டர்கள் கடும் அதிருப்தியில இருக்காங்களாம். கட்சியில் அவமானப்பட்டு , அடிபட்டு இவர்களுக்கு உறுதுணையாக இருந்தால் தொண்டர்களை கூட மதிப்பது கிடையாது. இப்படி இருந்தால் எப்படி கட்சியை தொண்டர்கள் வளர்ப்பார்கள். அவங்க எல்லாம் வேறு கட்சிக்கு தாவும் முடிவுல இருக்காங்க. டிசம்பரில் மொத்த பேரும் கட்சி மாறினாலும் மாறுவாங்க, கட்சி தலைமையிடம் சொல்லியும் ‘நோ’ ரெஸ்பான்ஸ்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கோவை காக்கி அதிகாரி ெவளிநாட்டில் செட்டில் ஆக போறாராமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை வட்டாரத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவில் டிஎஸ்பியாக பணிபுரிந்த ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு விருப்ப ஓய்வில் பறந்துட்டாராம். கரன்சி கொட்டும் நீலகிரி, திருப்பூர் என கோவை சரக வட்டாரத்தில் லஞ்ச ஒழிப்பு துறையில் இவர் 9 ஆண்டுக்கும் மேலாக இருந்தாராம். கோடிகளை வெளிநாட்டில் கொட்டினாராம். இது, இலைக்கட்சி முக்கிய புள்ளிகளிடம் அதீத பாசம் காட்டியதால் வந்த கரன்சியாம். குறிப்பாக, கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர், வடவள்ளியில் உள்ள இலைக்கட்சி பொறியாளர் என பலரது வீடுகளில் பெயரளவுக்கு ரெய்டு நடத்தினாராம். அதிகார பதவியில் இருந்தவரு திடீரென ‘விஆர்எஸ்’ வாங்கிட்டு போக என்ன காரணம் என்று தெரியாமல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசி கொண்டாங்க. இவர், பணி ஓய்வுபெற இன்னும் இரண்டு ஆண்டுக்கு மேல் இருக்கிறப்ப, ஏன் இப்பவே விஆர்எஸ் வாங்குனாருனு அத்துறையில ஒரே பேச்சா இருக்கு. இவர், கோவையில் உள்ள ஒரு சிட்டிங் எம்எல்ஏவின் சமூகத்தை சேர்ந்தவராம். அவருக்கு, தூரத்து சொந்தக்காரர் என்றும் பேசிக்கிறாங்க. இவர், ஒருசில முக்கிய புள்ளிகளிடமிருந்து பெரும்தொகை வாங்கிக் கொண்டு, இனி இந்த வேலை வேண்டாம்னு ஒதுங்கிட்டாராம். தனது மகனுடன் வெளிநாட்டில் செட்டில் ஆக முயற்சி செய்து வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நடிகர் கட்சி ஆரம்பித்தால் வெயிட்டான பதவினு ஆசை காட்டி கரன்சியை யார் கறக்கிறா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்தில் 3 எழுத்து நடிகரோட இயக்கம், இயங்கி வருது. இந்த இயக்கத்துல இருக்குற மாவட்ட பொறுப்பாளர் ஒருவர், பல ஆண்டுகளாக அந்த பதவியில இருந்து வர்றாரு. அவர் மேல நிறைய புகார்களாம். கீழ் மட்டத்துல இருக்குறவங்கள மதிக்குறதே இல்லையாம். ஒரு படம் ரிலீஸ் செஞ்சா, பல லட்சங்களை அள்ளிவிடுறாராம். ஆனா, பேனர் வைக்குறதுக்கும், அன்னதானம் போடுறதுக்கும், கீழ்மட்டத்தில் இருக்கிற நிர்வாகிங்கிட்டதான் வசூல் வேட்டை நடத்துறாராம். இது ஒருபுறம் இருக்க, விரைவில் அந்த நடிகர் கட்சி தொடங்க இருப்பதாக தகவல் பரவி வருது. இதைவெச்சி, அடுத்து இந்த மாவட்டத்துக்கு நான் தான் எல்லாம்.. நான் சொல்லுறதுதான் நடக்கும்னு ‘சினிமா’ காட்டி வர்றாராம். கட்சியில பதவிகள் வேணும்னா, முன் கூட்டியே என்னை கவனித்தால் தான் பாசிடிவ் ரிசல்ட் கிடைக்கும், இல்லன்னா கிடைக்காதுன்னு ஆடாத ஆட்டம் போடுறாராம். ஆட்டம் போட்டவங்க கதை எங்களுக்கு ெதரியாதா… இவர் கதையும் அப்படி தான் முடியபோகிறது…’’ என்று சொன்னார் விக்கியானந்தா.

The post குக்கர் கட்சியில இருந்து ஆண்டு இறுதிக்குள் ஒட்டுமொத்தமாக டிரான்ஸ்பராகும் தொண்டர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : party ,MLA ,Wikiananda ,North State River ,Cooker Party ,Yananda ,
× RELATED மாணவர்களுக்கு எம்எல்ஏ வாழ்த்து